கீரிமலைப் பகுதியில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமரது காணி தொடர்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவு

laxman-kathirkamarகாணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட போது பிரதிவாதிகளை விளக்கமளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வலி.வடக்கு – கீரிமலைப் பகுதியில் உள்ள தமது குடும்பச் சொத்தான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

1968ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட நீதிமன்றின் ஊடாக இக்காணி பிரிக்கப்பட்டு லக்ஷ்மன் கதிர்காமருக்கு உடமையாக்கப்பட்டிருந்தது.

லக்ஷ்மன் கதிர்காமர் இறந்துவிட்ட நிலையில் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் இக்காணி அவரது மகனான ஸ்ரீராகவனுக்கு உரித்துடையதாகியுள்ளது.

காணி சுவீகரிப்பு சட்டமூலத்தினூடாக இந்தக் காணியில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதைத் தடுப்பதற்கான இடைக்கால நிவாரணத்தைப் பெற்றுத்தருமாறும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தனது காணிக்கு இறுதியாக இராணுவ அனுமதியுடன் கடந்த 2011ஆம் ஆண்டு தான் சென்றதாகவும் காணிக்கு அருகில் பெருமெடுப்பில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலய எல்லையை பின் நகர்த்துவதன் ஊடாக தனது காணியை தான் முழுமையாகப் பயன்படுத்த முடியும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசவழமைச் சட்டத்தின் படி எனக்கு உரித்துடைய எனது முன்னோர்களின் காணியை எனது அனுமதியின்றி சுவீகரிப்பதானது எதேச்சாதிகாரமானது. அநீதியானது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.