கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தீர்வையே ஏற்போம்: சிறிகாந்தா

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலை ஏற்படுமாயின், கிழக்கை தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளர்.

அத்தோடு, கிழக்கு மக்களை பலிக்கடாவாக்கி கிடைக்கும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒருமித்த நாடாக இருக்கப் போகின்றதென்றால், அதற்குள்ளேயே அதிகாரப் பகிர்வு திருப்திகரமாக பகிரப்படுகின்ற நிலையில், எஞ்சிய ஒரே ஒரு பிரச்சினையாக வடக்கு கிழக்கு இருக்குமாயின் அது தொடர்பான விட்டுக்கொடுப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், திருகோணமலையில் இருந்து பொத்துவில் வரை உள்ள கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு நிர்வாக முறையை மாத்திரமே ஏற்றுகொள்வோம் என சிறிகாந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts