கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்

கிளி/மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவி சந்திரகுமார் லக்சிகா, கிளி/திருவையாறு ம.வி மாணவன் பரமானந்தன் சாரலன், கிளி/ம.வி தேவராசா சபில்சன் ஆகியோர் 177 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை மாணவி லக்சிகா கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை சேர்ந்தவர் தந்தை சந்திரகுமார் ஒரு மேசன் தொழிலாளி தாயார் கார்த்திகா வீட்டுப்பணிகளை கவனிக்கின்றார்.வீட்டில் அண்ணனும் அம்மாவும் பாடசாலையில் துஸ்யந்தி ஆசிரியையும் பிரத்தியேகமாக சசிரதன் ஆசிரியரும் கற்பித்து தன்னை இந்நிலைக்கு உயர்த்தியதாக மாணவி லக்சிகா சொல்கிறார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த சபில்சன் ஜெயந்திநகர் கிளிநொச்சியை சேர்ந்தவர் தந்தை தேவராசா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்றார்.

அம்மா உதய நிர்மலா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியானராக பணி செய்கின்றார். வீட்டில் அப்பா தமிழ் கணிதம் போன்ற பாடங்களையும் அம்மா ஆங்கிலத்தையும் கற்றுதருவதாகவும் பாடசாலையில் ஆசிரியை திருமதி கமல்ராஜ் ரேகா மிகுந்த ஆழமாக கற்றுத்தருவதாகவும் பிரத்தியேகமாக ஆசிரியர் சசிரதனின் இடைவிடா முயற்சியே மாவட்டத்தில் முதல்நிலை பெற காரணம் என்கிறார் சபில்சன்.

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த பரமானந்தம் சாரலன் திருவையாறு மூன்றாம் பகுதியை சேர்ந்தவர்.இவரின் தந்தை பரமானந்தம் ஒரு ஆசிரியர் தாயார் கிரிஜா வீட்டுப்பணிகளுடன் மகனின் கல்வியில் அக்கறையாக இருந்துள்ளார்.

பாடசாலையில் செல்வி.அ.அருள்நந்தினி திருமதி ச.சிவானந்தம் ஆகியோரும் பிரத்தியேகமாக திருமதி.கரோலின் திருமதி.சிவபாக்கியம் ஆகியோரும் எடுத்த
முயற்சியே மாவட்டத்தில் தங்கள் மகன் முதல்நிலை பெற காரணம் என்கின்றனர்.

சாரலனின் தந்தை கருத்து சொல்கையில், தங்கள் வீட்டுக்கு மின்சாரம் தரப்படவில்லை. எம் மகன் பாடசாலையில் நடந்த போட்டியொன்றில் முதலிடம் பெற்றததற்காக Child Fund நிறுவனம் பரிசாக தந்த சூரிய மின்கலத் தொகுதிக்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக சொல்கிறார். அதனால் தான் தன் மகன் அதிகமாக படித்தார் எனவும் தெரிவித்திருந்தார்.