கிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பு காரியாலயம் மீது தாக்குதல்!- 2 பொலிஸார் உட்பட 15 பொதுமக்கள் படுகாயம்

holiday-newyearகிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று மதியம் 12 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சரவணபவன் ஆகியோர் இன்று பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புக் கடடையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உட்பட 15 பொது மக்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய கொடிகளுடன், முகங்களை மூடிக் கொண்டு வந்த சிலரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனைக் கொச்சைப் படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டே அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாக்குதல் சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்திற்குப் பிறகெ அவ்விடத்திற்கு பொலிஸார் வந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய இரண்டு பேரை பொது மக்கள் பிடித்து காவற்துறையினரிடனம் ஒப்படைத்த போதும், அவர்களை பின்னர் காவற்துறையினர் விடுவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை மற்றும் அளவெட்டி பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்களை விடுதலை செய்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவப் புலனாய்வாளர்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.