கிராம அலுவலர்கள் மாலை 4.15 வரை கடமையாற்ற அறிவுறுத்தல்!

கிராம அலுவலர்கள் நாளாந்தம் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகத்தில் கடமையாற்ற வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் அலுவலகங்களுக்கு இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர்களில் 90 வீதத்துக்கும் மேற்பட்ட கிராம அலுவலர்கள் திங்கள், வியாழன் நாள்களையே பெரும்பாலும் தமது அலுவலக நாள்களாகக் கொண்டு கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் இதுதான் அலுவலக நாள்கள் என்ற கருத்தில் தமது கடமைகளை இந்த நாள்களில் சென்று நிறைவேற்றிவருகின்றனர். அரசால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் கிராம அலுவலர்கள் தமது ஓய்வு நாளாக கொள்ளப்படும் ஒரு நாளையும் மற்றும் புதன் கிழமைகளில் பிரதேச செயலகங்களில் இடம்பெறும் நாள் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாளையும் தவிர்ந்த ஏனைய நாள்களில் தமது அலுவலகங்களில் கடமையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உரிய முறையில் கிராம அலுவலர்கள் நடைமுறைப்படுத்தாது தமது போக்கில் இரண்டு நாள்கள் மட்டும் கடமையாற்றினால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில் பொது மக்களுடைய பங்களிப்பும் கிராமிய மட்டத்தில் காணப்படும் பொது அமைப்புக்களின் பங்களிப்பும் முக்கியம் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webadmin