வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் பயன் பெறும் விதமாகக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2016) நடைபெற்றுள்ளது.
உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கால்நடை மருத்துவ சேவையை மக்களை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடமாடும் சேவையில் மருத்துவ ஆலோசனை, மருந்துப் பொருள் விற்பனை, கால்நடை வளர்ப்புக் கையேடுகள் விற்பனை, நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை, கால்நடைகளுக்கான காப்புறுதி, பசுத்தீவனமான ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உட்பட பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.
இச்சேவைகளைப் பெற்றுக் கொள்ள ஏராளமான கால்நடை வளர்ப்பாளர்கள் உடையார்கட்டு மகாவித்தியாலயத்துக்கு சமுகமளித்திருந்தார்கள். கால்நடைகளை எடுத்துவர முடியாத பண்ணையாளர்களின் வீடுகளுக்குக் கால்நடை மருத்துவர்கள் நேரடியாகச் சென்று சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
கால்நடை மருத்துவ நடமாடும் சேவையின் தொடக்க நிகழ்ச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரனின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சி.கிரஜகலா, வலயக் கல்விப் பணிப்பாளர் முனீஸ்வரன் உதயராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.