கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே?: கால்நடை வளர்ப்போர் கேள்வி

aaaduவேலனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே? என்று கால்நடை வளர்ப்போர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தீவகப் பகுதிகளில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் மற்றும் ஆடுகள் குடிநீர் இன்றி இறந்துவரும் நிலையில் இதனை சீர் செய்வதற்காக வேலனை பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டத்தை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

வரட்சியினால் கால்நடைகள் இறப்பதை தடுப்பதற்காக வரட்சியான காலத்தில் மிருகங்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கான தொட்டில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றே வேலனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

தீர்மானம் எடுக்கப்பட்டு சுமார் ஒரு வருடங்கள் கடந்த நிலையிலும் இதுதொடர்பாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையோ அன்றி யாழ்.மாவட்ட கால்நடைத் திணைக்களமோ கவனம் எடுக்கவில்லை’ என கால்நடை வளர்ப்பேர் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது மீண்டும் கடும் வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை உரிய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் வேலனை கால்நடை வளர்போர் தெரிவிக்கின்றனர்.