காரைநகரில் விவசாயிகள் மீது தாக்குதல்!!

சிறு தானிய பயிர்ச் செய்கையைப் பாதுகாக்க கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்குச் சென்ற விவசாயிகள் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 5 பேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைநகர் மணியம் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் பெரும்போக நெற் செய்கை அறுவடையையடுத்து உழுந்து உள்ளிட்ட சிறுதானியச் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறுதானியச் செய்கையை கட்டாக்காலி கால்நடைகள் மேய்வதால் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்கு விவசாயிகள் நேற்றையதினம் முயன்றுள்ளனர். அவர்களை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்பு குழாய்களால் துரத்தி அடித்து தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் காரைநகர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து சென்றனர். ஏனையோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts