காரைநகரில் மருத்துவர் இன்றி இயங்கும் மருத்துவமனை!- நோயாளர்கள் பெரும் சிரமம்

doctor_bகாரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதேவேளை, வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி இல்லாமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த முறையில் சேவையாற்றி மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுவந்த மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை அவரது இடத்திற்கு எவரும் நியமிக்கப்படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.

காரைநகர் மக்கள் மட்டுமன்றி மூளாய், சுழிபுரம் போன்ற அயற்கிராமங்களில் இருந்தும் நோயாளர் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் இன்றி அங்கு வைத்திய சேவை எதுவும் நடைபெறுவது இல்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.