காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார்.
காரைநகருக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் குறித்த பஸ்தரிப்பு நிலையங்களை நேற்று (08) திறந்து வைத்தார்.
முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான காணியினை அமரர் கந்தையா ஆறுமுகம்பிள்ளை அன்பளிப்பு செய்திருந்தார். இதேபோன்று களபூமி ஊரிச்சந்தி பெரியமதவடிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பஸ்தரிப்பு நிலையத்தையும் செயலாளர் நாயகம் அவர்கள் திறந்து வைத்தார்.
இதற்கான காணியினை பரமநாதன் ஹஜிராதா தியாகி அன்பளிப்பு செய்திருந்தார். இதேபோன்று வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பஸ்தரிப்பு நிலையத்தையும் செயலாளர் நாயகம் அவர்கள் திறந்து வைத்தார்.
மேற்படி மூன்று பேருந்து தரிப்பு நிலையங்களும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 2014 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் பிரதேசத்தில் பஸ்தரிப்பு நிலையங்கள் இல்லாத நிலையில் வெய்யில் காலங்களிலும் மழைகாலங்களிலும் பேருந்துக்காக தாம் காத்திருக்கும் வேளையில் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்ததாகவும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பு நிலையங்கள் தமது நீண்டகால தேவையை பூர்த்தி செய்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் காநைகரில் தனியார் பேருந்து சேவைச் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதனிடையே காரைநகர் நம்பாவில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச அமைப்பாளர் வீ.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.