யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் முன்னாள் போராளியான இளைஞர் ஒருவர் காதல் முறிவினால் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயநாத் (27) என்ற இளைஞரே தற்கொலை செய்துகொண்டார்.
குறித்த சம்பவம் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் ஒரு முன்னாள் போராளியாவார். இவர் கடந்த 8 வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். போரின்போது தனது ஒரு கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார்.
இவரின் கண்பார்வையைச் சுட்டிக்காட்டிய பெண்ணின் தந்தையார் இவர் ஒரு முன்னாள் போராளி என்ற காரணத்தினாலும் இவர்களது காதலுக்கு மறுப்புத் தெரிவித்தார்.
இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.
இதனால் மனமுடைந்த இளைஞன் மதுவுக்கு அடிமையாகியதுடன், நேற்று முன்தினமிரவு வெளியில் சென்று வருகிறேன் எனக் கூறி சென்று வீடு திரும்பாததால் வீட்டுக்காரர் இவரைத் தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டக் காணியில் குறித்த இளைஞர் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டமையும் தெரியவந்துள்ளது. உடனடியாக இளைஞர் அச்சுவேலி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் பெற்றோரை இழந்துள்ளதுடன் உறவினர்களுடன் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.