காணி சுவீகரிப்புக்கு டக்ளஸும் சந்திரசிறியும் ஆதரவு – சஜீவன்

வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றார்களா? என தான் சந்தேகப்படுவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.

sajeepan

கீரிமலை பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்காக நேற்றுயதினம் மேற்கொள்ளப்பட இருந்த நிலஅளவை பணிகளை தடுக்கும் நோக்குடன் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

‘வடக்கிலே இராணுவம் மற்றும் கடற்படை தேவைகளுக்காக பொதுமக்களின் 6,500 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இக்காணி சுவீகரிப்புக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆதரவாக இருக்கின்றார்களோ என நான் சந்தேகப்படுகிறேன்.

வடக்கிலே மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலும் இனியும் அந்நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பார் என்ற நோக்குடனேயே அரசாங்கத்தினால் மீண்டும் வட மாகாண ஆளுநராக சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார் என்றே எண்ணுகிறேன்.

அதேபோல, இக்காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ந்து மௌனமாக இருந்து வருவதை பார்க்கும் போது, அவரும் இந்நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கின்றாரோ என சந்தேகப்படத் தோன்றுகின்றது’ என அவர் மேலும் தெரிவித்தார்.