காணி சுவீகரிக்கும் நோக்கில் இடம்பெற்ற நிலஅளவை பணிகள் இடைநிறுத்தம்!

ananthy-sasikaran-tnaயாழ்ப்பாணம், கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (07) காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்து கூறுகையில்,

‘திருவடி நிலைப்பகுதியில் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்களினுடைய 120 ஏக்கர் காணிகளையும், சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியினையும், மற்றும் கீரிமலையில் 6 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியும் சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவையாளர்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை (07) மேற்கொள்ளப்படவிருந்தன.

இதனை அறிந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலி.வடக்குத் தவிசாளர் எஸ்.சுகிர்தன், வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி.வடக்குப் பிரதேச சபை உபதவிசாளருமான சண்முகலிங்கம் சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் உள்ளிட்டவர்களுடன் நானும் சென்று காணி அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்தியிருந்தோம்.

மேலும், ஆரோக்கியநாதர் தேவாலயமானது கைவிடப்பட்ட நிலையில் சேதமடைந்து காணப்படுவதினால் அதனைத் திருத்துவதற்கு நிதிப் பங்களிப்புச் செய்வதாக நானும் சிவாஜிலிங்கமும் தேவாலய மதகுருவுக்கு உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்