காணிகளை விடுவிக்குமாறு கோரி வவுனியாவில் இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆயுதப் போர் நிறைவடைந்து 07வருடங்கள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் இன்னமும் நிலை கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர், யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம், மறந்துவிட்டாய் நம் நிலத்தை மைத்திரி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிசாரும், புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா குடியிருப்புப் சந்தியில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் அடுத்து ஓமந்தையில் A9 வீதியை மறித்து இடம்பெற இருப்பதாக தெரிய வருகிறது.

Related Posts