யுத்த காலத்தில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான எதிரப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவில் சிலர் பேரணியாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும், பிரதேச செயலகங்களில் கையளித்துள்ளனர்.
இதன்படி, காணாமல் போனேரை தேடித்தருமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, ´வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதியே தீர்வாகும்´ என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.அஸீஸிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகளே அவசியம் என, வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வடக்கில் மாபெரும் பேரணியினை முன்னெடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கம் மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களும், பொது மக்களும் சமூக நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் தமது கோரிக்கைகளை ஏகோபித்த குரலில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வதிவிட காரியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட காரியாலயத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணிக்கு ஓர் பகிரங்க சமர்ப்பித்தலையும் அவர்கள் வழங்கியதுடன், அந்த மகஜரின் பிரதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, கொழும்பிலும் காணாமல் போனோறின் உறவினர் சங்கத்தால் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.