காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை அரசாங்கம் கைவிடாது!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஏற்கனவே கட்டாயப்படுத்தி வழங்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மரண சான்றிதழ் மீளப்பெறப்பட்டு அதற்குப் பதிலாக ‘காணமல் ஆக்கப்பட்டோர்’ சான்றிதழை வழங்குவதற்கான திருத்தத்தை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாக்கிழமை நடைபெற்ற இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழைப் பெறவேண்டாம் என்றும், அவ்வாறு அதை பெற்றால், காணாமல் ஆக்கப்பட்டவர் மரணித்துவிட்டார் எனக் கூறி விசாரணைகள் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை மக்கள் நம்பக்கூடாது.

இந்தச் சான்றிதழைப் பெற்றால், உங்கள் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் எனத் தெரிவித்து நீங்கள் தாக்கல் செய்த முறைப்பாட்டை அரசு ஏற்றுக்கொள்வதாகவே கருதவேண்டும். இது பற்றி அரசு விசாரணை நடத்தி ஆகவேண்டும். ஒருபோதும் அதை நிறுத்த முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சான்றிதழ் வழங்கும் இந்தச் சட்ட திருத்தமானது வித்தியாசமான வரவேற்கத்தக்க ஏற்படாக அமைந்திருக்கின்றது. நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்வதற்கான முதலாவது அங்கீகாரமாக இது திகழ்கின்றது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் கடந்த அரசு அக்கறைகாட்டவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி முறைபாடுகளை ஆராய விசாரணை ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தபோதிலும், அதற்குப் பதிலாக பரணகம தலைமையிலான ஆணைக்குழுவொன்றே அமைக்கப்பட்டது. அந்தக் குழு மீது மக்களும் அதிருப்தியிலேயே இருந்தனர். பணம் வேண்டுமா, ஆடு வேண்டுமா என்றெல்லாம்கூட விசாரணைகளின்போது அவர்கள் கேட்டுள்ளனர்.

குறிப்பாக பொதுவான சந்தர்ப்பங்களில் காணாமல் போய் நீண்டகாலமான ஒருவருக்கு சாதாரண சட்டத்தின் கீழ் மரணச் சான்றிதழ் வழங்குவது வேறு விடயம். ஆனால், இங்கு நிலைமை வேறு. தங்களது உறவுகள் இறந்துவிட்டன என ஏற்க மக்கள் மறுக்கின்றனர். தங்களது உறவுகள் கையளிக்கப்பட்ட (அரச) அதிகாரிகளே, அவ்வாறு கையளிக்கப்பட்ட உறவுகளுக்கான மரணச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு கூறும்போது, அதை எப்படி செய்ய முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கட்டாயப்படுத்தி மரண சான்றிதழ் வழங்கப்பட்டோர் தொடர்பில் மீண்டும் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க இடமளிக்கப்பட வேண்டும். அந்த மரண சான்றிதழ்கள் மீளப்பெறப்பட்டு அதற்குப் பதிலாக அவர்களுக்கு ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதற்கான திருத்தத்தை நான் இந்த சட்டமூலத்திற்கு குழுநிலையில் முன்வைக்கின்றேன். இந்த நாட்டில் இருந்து காணாமல் ஆக்கப்படுதல் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor