காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு

தொண்டைமானாறு அக்கரை கடலில் சனிக்கிழமை(04) நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை(05) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, நண்பர்களில் ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை.

இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை.

ஏனைய 11 நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் காணாமற்போன இளைஞன், ஞாயிற்றுக்கிழமை சடலமாக மிதந்ததையடுத்து, மீனவர்கள் சடலத்தை மீட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts