காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை சொந்த இடத்திற்கு சென்றுள்ளது.
இன்று வரை காங்கேசன்துறைக்கான பேரூந்து சேவையானது படிப்படியாக மீள கையளிக்கப்பட்ட பகுதியான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணி மீளக் கையளிப்பின் ஊடாக, பொன். பரமானந்தன் வீதியின் ஊடாக கட்டுவன் வரையான வீதியும், மல்லாகம் கட்டுவன் வீதியும் மற்றும் பொன். பரமானந்தன் மல்லாகம் இணைப்பு வீதியும் மக்கள் பாவனைக்கு மீள கிடைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த தங்களுடைய காணிகளை பொது மக்கள் இன்று பார்வையிட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வலி. வடக்கிலுள்ள 201 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், வலி. வடக்கிலுள்ள ஜே.233, ஜே.234, ஜே.235, ஜே.236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே 241) ஆகிய பகுதிகளிலுள்ள 201.3 ஏக்கர் காணிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.
குறிப்பாக வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியூடான 126.18 ஏக்கர்களும் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டியதான 63 ஏக்கர்களும் மற்றும் தெல்லிப்பளை 18 ஆவது சிங்கரெஜினோ படை முகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணி மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணி விடுவிப்பின் ஊடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை அண்டிய பகுதிகள் மக்கள் பாவனைக்காக கிடைத்துள்ளன.
இந்த நிலையில் இன்று இராணுவத்தினர் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தமது காணிகளை பார்ப்பதற்கும் துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கும் மக்களுக்கு அனுமதித்திருந்தனர்.