யாழ்ப்பாணம் வந்துள்ள கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, இன்று வெள்ளிக்கிழமை மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரில் பார்வையிட்டார்.
இவருடன் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். துறைமுகத்தை நேரில் அவதானித்த இந்தக் குழுவினர் அதன் அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கம் பாதுகாப்பு தேவைகளுக்கு தவிர ஏனைய காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை கடற்படையிடம் இருந்து பெற்று, வர்த்தக நோக்குக்காக அதனை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும்.
துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.