காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்தனர்.

தேசிய வருமானத்திற்கு பங்களிக்க கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ´செழிப்பு பார்வை கொள்கை ´க்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சரின் ஆலோசகர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க உள்ளிட்ட குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு சென்று பார்வையிட்டனர். சீமெந்து கூட்டுத்தாபனம் செயற்பட்ட காலத்தில் பணிபுரிந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் கலந்துகொண்டனர்.

1990 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலொன்றினால் இந்த தொழிற்சாலை மூடப்பட்ப்பட்டது.. இந்த தொழிற்சாலையின் நிலப்பரப்பு 750 ஏக்கர் ஆகும். அத்துடன், தற்பொழுது இத் தொழிற்சாலையில் பல இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.