கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி இடம்பெற்றுள்ளது

சிறிலங்கா அரசே எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே, யாழில் விண் அதிர கோஷம்.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது.

arpaddam-1

இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

நூற்றுக் கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

குடியேற்று குடியேற்று சொந்த நிலத்தில் குடியேற்று, எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே!, எங்கள் இடத்தை எங்களிடம் தா!,காணாமல் போன உறவுகள் எங்கே?

எமது வளங்களை பறிக்காதே!,விலை வாசியை ஏற்றாதே!அன்நிய மீனவர்களை வெளியேற்று எங்கள் மீனவரை வாழ விடு, வலி.வடக்கில் மீள்குடியேற்று, எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லவிடு, போன்ற கோசங்கள், மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

arpaddam-2

அச்சுறுத்தல்கள்

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல வேண்டாம் என நலன்புரி நிலைய மக்களை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் வெகுவிரைவில் உங்கள் இடங்களை விட்டுவிடுவோம் எனவே போராட்டத்திற்கு போகாதீர்கள் அவ்வாறு மீறிப்போனால் நடப்பது வேறு என்றும் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு பேருந்துகளில் மன்னாரிலிருந்து வந்தவர்களை தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதன் காரணமாக இவர்கள் மன்னார் விடத்தல் தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக காலி, பொத்துவில், சிலாபம் போன்ற இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.