சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி திங்களன்று, ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
பாடசாலைகளில் இராணுவத்தின் தலையீடு நிறுத்தப்பட வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க வேண்டும், தேசிய இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைவாக இடம் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும் இலங்கை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு ஏற்ப அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும், கல்வி அமைச்சின் நியதிக்கு ஏற்ற வகையில், ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.