கல்விசெயற்பாடுகளுக்கு கடந்த மூன்று வருடங்களில் 916 மில்லியன் ரூபா செலவு – அரச அதிபர்

Suntharam arumai_CIயாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி செயற்பாடுகளுக்கு 916 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை யாழ்.நூலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கல்வியில் முன்னிலை பெற்று திகழ்ந்தது. இருப்பினும் யுத்த காலகட்டங்களின் போது மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

வடக்கின் வசந்தத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 162 பாடசாலைகளுக்கு தலா 5 லட்சம் ரூபா நிதி பாடசாலை அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் யாழ்.மாவட்டத்தில் கல்வி அமைச்சினால் 20 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு தலா 8 மில்லியன் ரூபா செலவில் ஆய்வுகூட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் யாழ் பல்கலைக்கழக அபிவிருத்தி நடவடிக்கைக்காக 51 மில்லியன் 8 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும்

இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம்

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 84 வீதமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வருட இறுதிக்குள் 100 வீதமான வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததுக்குப் பின்னர் யாழ்.மாவட்டத்தில் 60 வீதமான வீடுகளுக்கே மின்சாரம் வழங்கப்பட்டிருந்து. எனினும் மேலும் துரித கதியில் ஏற்பட்ட அபிவிருத்தியில் இதுவரை 84 வீதமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த வருட இறுதிக்குள் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது

மாவட்டத்தின் அபிவிருத்தியில் கைத்தொழில் துறையானது முக்கிய பங்கு வகிக்கின்றது எனத் தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யுத்தத்தின்போது கைத்தொழில் துறையானது முற்றாக அழிவடைந்து விட்டதாகவும் கூறினார்.

ஆனாலும், தற்போது கைத்தொழில் துறையானது கிராம மட்டங்களில் சிறு தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு கிராம மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனால், கைத்தொழில் துறையானது அபிவிருத்தியில் முக்கிய பங்களிக்கின்றதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.