கல்லோடு கட்டி கிணற்றில் வீசப்பட்ட 2 சடலங்களால் வேலணையில் பரபரப்பு

யாழ்ப்பாணம் வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் உட்பட மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.குறித்த வைரவர் கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று மதியம் குறித்த கிணற்றிலிருந்து மண்டை ஓட்டை மீட்க முயன்ற சமயம் இன்னொரு மண்டையோடும் மனித எச்சங்களும் கிணற்றுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எலும்புகளை வெளியே எடுக்கும்போது அவை காணப்பட்ட விதமே அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கயிற்றால் கல்லுடன் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் வீசி படுகொலை செய்யப்பட்டவர்களுடைய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இரு மனித எச்சங்கள் தொடர்பாக விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.