கர்ப்பிணி உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்

யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதால் ஏற்பட்ட விபத்தில், கர்ப்பிணி பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (12) அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினார்கள்.

படுகாயமடைந்தவர்கள் சுயநினைவிழந்த நிலையில் இருப்பதாகவும் அதன் காரணமாக, அவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை தெரியவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

பலாலி வீதியில் துவிச்சக்கரவண்டியில் ஏறமுற்பட்டவர் மீது, வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதுடன் அந்த துவிச்சக்கரவண்டி வீதியில் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிள், மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் பயணித்த கர்ப்பிணி பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.