கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பில் கர்நாடகத்தில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் வடக்கு தமிழர்கள் மிகவும் கவலையுடன் காணப்படுகின்றனர். இதற்காக உடனடி தீர்வை இந்திய அரசாங்கம் முதலில் பெற்றுதர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே, சிவாஜிலிங்கம் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை இதன்போது கருத்து வௌியிட்ட மிருகப்பலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம்,

இந்திய கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள். உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய தமிழர்கள் தாக்கப்படும் போது இலங்கைத் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த நான்கு நாட்களாக நடைபெறும் இந்த சம்பவங்கள் ஈழத் தமிழரின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசின் கையில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கைப் பயன்படுத்தி உடனடியாக வழமைக்கு திருப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாரும் எவரையும் தாக்கக் கூடாது. போதுமான அளவு காவல்துறையினரை வைத்திருக்கும் கர்நாடக அரசு தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு முடியாவின் மத்திய அரசு டெல்லியில் இருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் துணைப்படையினர், பொலிஸாரை அனுப்பி நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கும் கர்நாடக தமிழர்களுக்கும் இடையில் உள்ள இந்த இரத்த உறவினால் தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் ஓயாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலினை நிறுத்தாவிடின், அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

பெங்களூர் தமிழ் சங்கம், இனப் படுகொலை மற்றும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்கு சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுத்த கர்நாடக தமிழ் மக்கள் துன்பப்படும் போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும், என அவர் கூறியுள்ளார்.

Related Posts