கட்டாயத் திருமண வழக்கில் ஐவருக்கு பிணை

judgement_court_pinaiவல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த கோகுலதாஸ் ஜிவனாத் (வயது 36) என்பவருக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு சனிக்கிழமை (26) பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே. கஜநிதிபாலன் தலா 2 லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இத்திருமண சம்பவத்தில் ஏமாற்றப்பட்டவருக்கும் திருகோணமலையைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 1ஆம் திகதி வல்வெட்டித்துறையில் சம்பந்தக் கலப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் தான் திருமணம் செய்யப்போகும் பெண் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்பது தொடர்பாக, நண்பர்கள் மூலம் மணமகனுக்கு தெரியவந்ததும் இத்திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணமகனுடைய வீட்டிற்கு, கடந்த 2ஆம் திகதி வந்த சிலர் அவரை மிரட்டி திருகோணமலை அழைத்துச் சென்று அப்பெண்ணுடன் பதிவுத் திருமணத்தினைச் செய்து வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 07ஆம் திகதி வல்வெட்டித்துறை பொலிஸில் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண்ணுக்கு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அந்த திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறையிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மணமகள் உட்பட ஐவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை (26) வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி

அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு

Related Posts