Ad Widget

கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (24.08.2016) யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்துள்ளார்.

03

வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு தொழிலின்போது பனையில் இருந்து தவறி வீழ்ந்து இறந்த பனைச்சாறு உற்பத்தித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குக் கடந்த ஆண்டில் இருந்து வாழ்வாதார நிதியாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கிவருகிறது. இவ்வாறானதொரு உதவியைத் தங்களுக்கும் வழங்குமாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கோரி வந்த நிலையில் தற்போது இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட 2013ஆம் ஆண்டு செம்ரெம்பர் 21ஆம் திகதி முதல் இற்றைவரை கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பரிந்துரையுடனும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களின் பரிசீலனையின் அடிப்படையிலும் வாழ்வாதார நிதிபெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் 22 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 06 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குடும்பமும் தற்போது முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு இக்குடும்பங்களுக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது குடும்ப உறுப்பினர் ஒருவரின் கணக்கில் நிரந்தர வைப்பில் இடுவதற்குரிய ஏற்பாட்டை நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்த மக்கள் வங்கியின் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் க.சுசீந்திரன் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களினதும், சமாசத்தினதும் பிரதிநிதிகள், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts