வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தாண்டுபோன கடற்கலங்களால் அப்பகுதியில் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாரட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியான மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, கடற்பகுதியில் பெருமளவு கடற்கலங்கள் மூழ்கியுள்ளன.
இதனால் அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் நாளாந்தம் தங்கள் வலைகளை இழக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு படகுகளும் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதும் நீரியல் வளத் திணைக்களம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, ‘வடமராட்சி மற்றும் காரைநகர், ஊர்காவற்துறைப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சனைகளுக்கு மீனவர்கள் முகம்கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கடற்தொழில் சமாசங்கள் எழுத்து மூலம் அறியத் தந்தால் தமது அமைச்சின் ஊடாக கடற்படையினரின் உதவியுடன் குறித்த பகுதிகளில் தாண்டு போயுள்ள கடற்கலங்களை மீட்க முடியும்’ என்று கூறினார்.