Ad Widget

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு! – நீதிமன்றில் ஏற்றுக்கொண்டது கடற்படை

திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளை, திருகோணமலை சித்திரவதை முகாமில் ஐ.நா. சிறப்பு அதிகாரிகளின் விஜயத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மனிதர்களுடையதா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக அவற்றை கொழும்பு மரண வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அனுப்பியிருப்பதாக கடற்படை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

அத்துடன் லெப்தினன் கொமான்டர் சம்பத் முனசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சிலரது கடவுச் சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், துப்பாக்கி ரவைகள் தொடர்பான வழக்கும் இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றய வழக்கு விசாரணையில் பாரியளவான கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவினால் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்பான விளக்கமளிப்பு வழங்கப்பட்டது.

இதன்போதே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

Related Posts