யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா கடத்தலுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் குற்றச்சாட்டியுள்ளார்.
வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கஞ்சா கடத்தலைக் கண்டுபிடித்தால், அந்த உத்தியோகத்தர்களை மேல்நிலை அதிகாரிகள் இடமாற்றம் செய்கின்றனர். இது பெரும்பாலும் இளவாலை பொலிஸ் பிரிவில் இடம்பெறுகின்றது. இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது’ என்றார்.
‘அந்த ஆதாரங்களை எழுத்து மூலமாக சமர்ப்பியுங்கள். விரைவில் பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணம் வருகை தருவார். அவ்வேளையில் அவரிடம் இதனை ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கலாம்’ என இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.