கசூரினா கடற்கரையில் இளைஞர்கள் மதுபோதையில் அட்டகாசம்!

kasurna_beachகாரைநகர் கசூரினா கடற்கரைக்குச் செல்லுகின்ற சில இளைஞர்கள் மதுபோதையில் பெண்களிடம் சேட்டை செய்தல் மற்றும் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கசூரினா கடற்கரையின் சுற்றுலா மைய வளாகத்தில் மதுபானம் பாவிப்பதற்கு காரைநகர் பிரதேச சபை தடை விதித்துள்ள நிலையில் சுற்றுலா மையத்திற்கு வெளியில் மது அருந்துவதைக் காணமுடிகிறது.

மது அருந்திய இளைஞர்கள் போதை தலைக்கேறியதும் தம்மை மறந்து மற்றவர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுதல், இளம் பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஸங்களில் ஈடுபட முனைதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கசூரினா சுற்றுலா மையத்தில் பொலிஸார் கடமையில் உள்ள போதிலும் இச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காரைநகர் பிரதேச சபையினர் பாதுகாப்பு ஊழியர்களை நியமித்து இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.