ஒற்றையாட்சி வேறு வடிவத்தில் தொடர்கிறது: தமிழ் சிவில் சமூக அமையம்

இலங்கை அரசியலில் வெளிப்படையாக சொல்லப்பட்டு வந்த ஒற்றையாட்சி கருத்தியல் வேறு வடிவங்களில் தொடர்கிறது என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெடுங்காலமாக பிற்போடப்பட்டு வந்த அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒற்றையாட்சி என்ற பதத்தை மறைத்து, ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதா, இடைக்கால அறிக்கை அவ்வாறானதொரு அரசியலமைப்பை முன்மொழிந்துள்ளதா என எண்ணத் தோன்றுகிறது.

சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியின் தொடர்ச்சி என்றும், இலங்கை மக்களின் இறைமை பிரிக்கப்பட முடியாதது என தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலப்படுவது என்னவென்றால், இதுவரை காலமும் இலங்கை அரசியலில் வெளிப்படையாக சொல்லப்பட்டு வந்த ஒற்றையாட்சி கருத்தியல் வேறு வடிவங்களில் தொடர்கிறது.

அதிகார பிரிப்பு என்பது தெளிவாக இருக்க வேண்டும் என இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் மாகாணங்களுக்கு எது அதிகாரம், மத்திக்கு என்ன அதிகாரம் என்பது இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறாக நோக்குவோமானால் உள்ளடக்கத்திலேனும் சமஷ்டியின் கூறுகளுக்கான எவ்வித முழுமையான முன்வைப்புகளும் இல்லை என்பது தெளிவாகின்றது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரச காணிகள் தொடர்பில் இதில் கூறப்பட்டுள்ள போதிலும், அதிலும் குழப்பகரமான நிலையே நீடிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts