ஒரே மேடையில் ஒன்றுகூடுகின்றனர் சந்திரிகா, ரணில், அனுரகுமார, பொன்சேகா!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதிகாரப் பகிர்வினூடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளன.

chantherecca-ranil-ponseka

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பொது நோக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் நாளை புதன்கிழமை பொது மேடையில் ஒன்றுகூடுகின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் எதிரணிகளின் பொதுக் கூட்டணியினால ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கோட்டே சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போதே சகல எதிர்க்கட்சிகளினாலும் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பில் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள், ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, மௌபிம ஜனதா கட்சி, ஜனநாயக முன்னணி, சிஹல உறுமய, ருகுணு ஜனதா கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, சம்கி சம்மேளனம், சுதந்திர ஊடக மையம், பலமு பெரமுன, ஜனநாயக தேசிய முன்னணி, தொழிலாளர் முன்னணி ஆகிய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.