ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்பு – 34, 818 பேருக்கு பயிற்சியாளர் நியமனம் வழங்கப்பட்டது

மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் இளையோருக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை நேற்றையதினம் (ஒக்.19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியமனம் பெறுபவர்கள் தங்கள் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட 25 பகுதிகளில் ஆறு மாத முறையான பயிற்சி பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பயிற்சி திட்டத்தின் பொறுப்பில் தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழு உள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு NVQ III தர சான்றிதழ் வழங்கப்படும். ஒரு பயிற்சியாளருக்கு பயிற்சி காலத்தில் மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

“வறுமையற்ற இலங்கை” என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டமாகும். அது பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறைந்த வருமானம் பெறுவோரின் வருமானத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி வறுமையை ஒழித்தல், வருமான ஏற்றத்தாழ்வினை முடியுமானளவு சமப்படுத்தி மக்கள் மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்ச்சித்திட்டம் இவ்வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலின் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அனைத்து விண்ணப்பங்களையும் தமது பிரதேச கிராம அலுவலரிடம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விண்ணப்பதாரிகளை நேர்முக தேர்வுக்கு உற்படுத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட எவரும் அரச அல்லது தனியார் துறை நிறுவனங்களில் தொழில் ஒன்றினை பெறாத குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.

ஆட்சேர்ப்பு செய்யப்படுவோர் அரச விவசாய காணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாயம் செய்யமுடியுமான காணிகளில் நவீன விவசாய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் வன சீவராசிகள், வனப் பாதுகாப்பு, நீர்ப்பாசன கமநல சேவைகள், விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.

Recommended For You

About the Author: Editor