ஒரு நாட்டின் கீழ் வாழ விரும்புகின்றோமே தவிர ஒற்றை ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை; சிவாஜிலிங்கம்

Sivaji-lingamஒரு நாட்டின் கீழ் வாழ விரும்புகின்றோமே தவிர ஒற்றை ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை என தமிழர் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகியோர் போர்க்குற்றவாளிகள் இவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அரசு தனது கூலிப்படைகளை வைத்து செயற்படுகின்றது. அதேவேளை, இராணுவத் தலையீடுகள் மிக மோசமாக இருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் சுயாதீன ஆட்சியினை நிறுவுவதே எமது நோக்கம் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த சந்தர்ப்பத்திலும் தமிழீழத்தினை கேட்கவில்லை. அதேவேளை, விடுதலை புலிகளும் கேட்கவில்லை.

அந்தவகையில், மாகாண சபை அதிகாரத்தை ஆரம்பமாக கொள்ளமுடியும், அதை அரசாங்கத்தின் அடி வருடிகளும், ஏனையோரும் கைப்பற்றக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்கின்றது. அரசாங்கம் மாகாண சபை அதிகாரங்களை மாத்திரமல்ல, பிரதேச சபை அதிகாரங்களை கொடுப்பதற்கு கூட தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச அழுத்தம் ஒன்றே அரசுக்கு நெருக்கடியினை கொடுக்கும், அவர்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்று நம்புவதுடன், சர்வதேச விசாரணை மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்தவகையில், போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள். தமிழ் மக்கள் தனிப்பட்ட வகையில் கூட வாக்களிக்க கூடாது, அவ்வாறு வாக்களித்தால், யாரும் கொல்லப்படவில்லை என்று அர்த்தமாகிவிடும் என்றார்.

அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்காட்டாலும் பரவாயில்லை, அரசுக்கு வாக்களிக்க கூடாது என்பதே எமது பணிவான வேண்டுகோள் என்றார்.