Ad Widget

ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபை குறித்த ஒழுங்கமைப்புக்கு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் வற்புறுத்த வேண்டும்.- தேவராஜ்

மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை

இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வேளையில் இலங்கையில் புதிய அரசியல்யாய்ப்பு குறித்து குறிப்பாக மு .திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் குறித்த ஆய்வரங்கில் ஒன்றுகூடியுள்ளோம். நண்பர் மு. திருநாவுக்கரசு எனது பல்கலைக்கழக சகபாடியாகும். இருவருமே யாழ். பல்கலைக்கழகத்தில் வரலாற்றுதுறை மாணவனாக இருந்தவர்கள். பொதுவில் ஒத்த கொள்கை, ஒன்றுபட்ட மனப்போக்குடனான நல்ல நண்பனாக நாம் இருந்துள்ளோம் .

அந்த ஒரு நண்பனின் இலங்கை அரசியல் யாப்பு, டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிரிசேன யாப்பு வரை அதாவது 1931 முதல் 2016 வரையிலான ஒரு நீண்ட வரலாற்றை மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த நூல் குறித்து இந்த அரங்கில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய ஏற்பாட்டாளர்களுக்கு குறிப்பாக நண்பன் நிலாந்தனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் ஞாபகத்தில் உள்ள ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடுகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன விவகாரத்தீர்வு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை நீங்கள் அறிவீர்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு வருட காலம் நீடித்தது. பேச்சுவார்த்தை ஆரம்பித்ததில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அரசாங்கத் தரப்போ பேச்சுவார்த்தை குறித்து வாய் திறக்கவில்லை.

நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரன் – அவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்தார். இவரும் பேச்சுவார்த்தை குறித்து சுமுகமாக நடைபெறுகின்றது என்ற வாசகத்துடன் முடித்துக்கொள்வார்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அரச தரப்பும் சுருக்கமாக சுமுகமாக நடைபெறுகின்றது என்ற பதிலையே வழங்கின. அரச தரப்பு சார்பாக கலந்து கொண்ட அமைச்சர் ஒருவரைச் சந்தித்தபோது பேச்சுவார்த்தை பற்றி வினவினேன். அவர் சிரித்துக்கொண்டு நன்றாகப் போகின்றது என்றார்.

அவருடைய சிரிப்புடனான பதில் பேச்சுவார்த்தை குறித்த தேடுதலை என்னுள் அதிகரித்தது. இறுதியில் பேச்சுவார்த்தை குறித்த உள்ளக உண்மைத் தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். அது செய்தியாக பத்திரிகையில் வெளிவந்தது. உண்மை எவ்வாறு கசிந்தது என்பது குறித்து இருதரப்பினரையும் யோசிக்க வைத்தது.

பேச்சுவார்த்தை தொடங்கி சுமார் மூன்று மாதங்களில் நான் உண்மையை வெளிக்கொண்டு வந்த போதும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமார் ஒரு வருடத்திற்குப் பின் பேச்சுவார்த்தை ஒரு அங்குலம் தானும் நகரவில்லை என்று அறிவித்தது.

ஆனால் அந்த ஒரு வருடத்தில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தப் பேச்சுவார்த்தையை சர்வதேச அரங்கில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தி வெற்றி கொண்டது.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தை சம்பவம் என்னை ஊடகத்துறையில் இருந்து விரைந்து தூக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஒரு தரப்பினரை வரவைத்தது. அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தையைக் குழப்புபவன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க, பிளவுபடுத்த முயல்பவன் என்ற குற்றச்சாட்டுக்களுடன் மேலும் இரு பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் இணைத்து வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் துணையுடன் எனக் கெதிராக காய்கள் நகர்த்தப்பட்டன. அந்த வரலாறு இன்று மீண்டும் திரும்பியுள்ளது.

அன்று மகிந்த ராஜபக்ஷ இன்று நல்லாட்சி முகம் என முகங்கள் மாறியுள்ளன. இன்றும் அதே நம்பிக்கை. ஆனால் நல்லாட்சிக்காரர்கள் மீது அதீத நம்பிக்கையில் 2016 இல் தீர்வு நிச்சயம் என்ற சுலோகத்துடன் புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ போல் நல்லாட்சியினரும் ஐ.நா. வில் வெற்றியைத் தேட கைகோர்த்துப் பயணிக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஷ அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை துரும்புச்சீட்டாக பாவித்து அன்று ஐ. நா. வில் மூச்சுவிட இடம் தேடிக் கொண்ட இலங்கை அரசாங்கம் இன்று அதேக் கூட்டமைப்பினரின் துணையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த சுலோகத்துடன் தன்னை ஐ. நா. வில் காப்பாற்றிக் கொள்வதற்காக வலம் வருகின்றது.

எந்த நிகழ்வு என்னை கருவறுத்ததோ அதே நிகழ்வு மீண்டும் என்னை உங்கள் முன் குறிப்பாக தமிழ் மக்கள் முன் நிறுத்தியுள்ளது என்பதை குறிப்பிடவே மேற் கூறிய சம்பவத்தை உங்கள் முன்வைத்தேன்.

புதிய அரசியலமைப்புக்கூடாக தீர்வு சாத்தியமானதா என்பது குறித்துப் பார்ப்பதற்கு முன் நண்பர் மு. திருநாவுக்கரசின் நூல் இன்றைய சம காலப் போக்கினை எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றது என்பது குறித்துப் பார்ப்போம்.

நண்பர் மு. திருநாவுக்கரசின் இந்த நூல் தமிழர்களின் இன விவகாரம் குறித்த வரலாற்றில் புதிய, தெளிவான பார்வையுடனான பதிவாக வெளி வந்துள்ளது.

இலங்கையில் இனவிவகாரம் என்பது இலங்கை வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டின் பிரசவம் என்றே பார்க்கப்பட்டது.

அத்துடன் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பகைமையின் வெளிப்பாடாக எழுந்த ஒன்று என்றும் கணிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த நூல் இன விவகாரத்தை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பகைமைக்கும் அப்பால் புவி சார் அரசியல் நலன் நோக்கிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றது.
இலங்கை இந்தியா நோக்கி பிரகடனப்படுத்தியுள்ள இராஜதந்திர மௌன யுத்தத்துடன் பாற்பட்டது என்ற புதிய எடுகோளினை மு.திருநாவுக்கரசு முன்வைத்துள்ளார்.

இலங்கை இந்தியா மீது தொடுத்துள்ள இராஜதந்திர மௌன யுத்தத்திற்கு இலங்கையில் தமிழர்கள் பலியிடப்படுகின்றனர்.

இலங்கையிலிருந்து தமிழர்கள் முற்றாக துடைத்தெறியப்படும் வரை இலங்கையின் இந்தியா நோக்கிய இராஜதந்திர மௌன யுத்தம் தொடரும் என்றும் மு. திருநாவுக்கரசு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அடித்தளத்தை மகா வம்சம் சிங்களவர்களின் மனதில் மிக ஆழமாகப் பதியவிட்டுள்ளது என்று கூறும் மு. திருநாவுக்கரசு தனது நூலில் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
1. தம்பதீபக் கோட்பாடு

வட இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முன் 6 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் தோற்றம் பெற்று இந்திய உப கண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவியது. ஆனால் 800 அல்லது 900 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற இந்து மதத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இந்தியாவில் இருந்து பௌத்த மதம் மறையத் தொடங்கியது.

இந்த வரலாற்றுப் போக்கினைக் கண்ட இலங்கை புத்த பிக்குகள் வரலாற்று ரீதியில் கௌதம புத்தருக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு பற்றி மகா வம்ச நூலினை எழுதி தம்பதீப கோட்பாட்டை நிலை நிறுத்தினர். புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ‘பூமியே இலங்கை என்ற கருத்தியலை வேரூன்றச் செய்தனர்.

பௌத்த மதத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கைக்கென புவிசார் நலன்களை மையப்படுத்தி தம்பதீபக் கொள்கையை பௌத்த பிக்குகள் இலங்கையில் பிரகடனப்படுத்தினர். மகா வம்சத்தின் இந்தப் பிரகடனம் ஒரு வரலாற்றுப் பிரச்சினையாக வடிவெடுத்து இன்று இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் அம்சமாக மாறிவிட்டது. இந்த புவிசார் நலன் இந்திய விரோதப் போக்காக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் காட்டிக் கொள்ளாமலே இலங்கையின் அரசியற் தலைவர்கள் தமது புவிசார் நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இராஜதந்திர வெற்றிகளை ஈட்டிக் கொண்டனர்.

இந்தியாவின் எதிரி இலங்கையின் நண்பன் என்ற பாணியில் தனது புவிசார் நலன்களை நோக்கி இலங்கை இன்று வெளிப்படையாகவே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இதனை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த வெளிநாட்டுச் சக்திகளைப் பயனபடுத்தி இலங்கையின் அரச கட்டமைப்பு தமிழர்களை அழித்தொழிப்பதை தனது கொள்கையாகக் கொண்டு செய்படுகின்றது.

2. தமிழக படையெடுப்புகள்

தமிழகத்தில் எழுச்சி பெற்ற அரசுகள் இலங்கை மீதுபடையெடுப்புகளை மேற்கொள்வது வழமையான சம்பவங்களாக இருந்தன.

அந்த வகையில் இலங்கையில் தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகவும், தமிழகத்தின் ஆக்கிரமிப்பாளர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.

3. பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம்.

இலங்கையில் மிக ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய விரோதப் போக்கினை இனங்கண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி பிரித்தானியர் தமக்கான புவிசார் அரசியல் நலர்களை அடைந்து கொள்வதில் வெற்றி பெற்றனர்.

இலங்கை அரசியலில் சிறுபான்மையினரான தமிழர்களைப் பயன்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தால் அரசியல் நலன்களை வெற்றிகொள்வதில் பிரித்தானியர் ஆர்வம் காட்டினர்.
எனினும் இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் இந்திய தேசிய வாதப்போராட்டத்தில் காட்டிய அக்கறை, ஈடுபாடு என்பன இந்தியப் போராட்டத்தின் விம்பமாகவும், காங்கிரசின் ஆதரவுக் கோட்டையாகவும் ஈழத்தமிழ் மண் மாறி வருவதை பிரித்தானியர் இனம் கண்டனர்.

இந்தப் போக்கு தமது இந்திய புவிசார் அரசியல் நலன்களுக்கு உகந்த தல்ல என்ற வகையில் பெரும்பான்மை இன சிங்கள மக்களை வைத்து தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் காய்களை நகர்த்தத்தொடங்கினர்.

இக்கால கட்டத்தில் சேர். போன். அருணாச்சலம் அவர்கள் 1918 – 1920 களில் இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக எதிர் காலத்தில் அமைவது என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினார்.

பிரித்தானியரின் புவிசார் அரசியல் நலன் இலங்கை இந்தியாவுடன் இணைந்திருப்பதால் அல்ல பிரிந்திருப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பதை அவர்கள் கணக்கிட்டிருந்த வேளையில் இலங்கைத் தமிழர்கள் பக்கம் இருந்து இலங்கையை உள்ளடக்கிய இந்தியா என்ற கருத்துக்களை ஜீரணிக்கும் நிலையில் பிரித்தானியர் இல்லை.

4. பெரும்பான்மை இன சிங்கள ஜனநாயகம் நோக்கிய அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள்.

எனவே பெரும்பான்மை இன சிங்கள ஜனநாயகம் நோக்கிய அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை பிரித்தானியர் அறிமுகப்படுத்தத் தொடங்கினர். இதன் ஆரம்பமே 1927 இல் உருவான மன்னிங் அரசியல் யாப்பு சீர்திருத்தமாகும்.

மொத்தத்தில் பெரும்பான்மை இன ஜனநாயகத்திற்கூடாக புவிசார் அரசியல் நலன்களை அடைந்து கொள்ளும் வகையிலான யாப்புச் சீர்திருத்தத்தை பிரித்தானியர் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வசன வாக்குரிமையின் பின்னணி கூட பெரும்பான்மை இன ஜனநாயகதிர்கான கதவுகளை திறந்து விடுவதற்கான திறவு கோளாகும் இதுவே.

பிரித்தானியரின் இந்த நகர்வுகளை அவதானித்த சிங்களத் தலைவர்கள் தமது பேரம் பேசும் சக்தி மூலம் பெரும்பான்மை இன ஜனநாயகத்தை நிறுவிக் கொள்வதில் வெற்றி கண்டனர்.

1. தமிழ்த் தலைவர்கள் எவரும் பிரித்தானியாவின் காலனிய கொள்கையில் ஏற்பட்ட கொள்கை மாற்றத்தினை சரிவர கணிப்பிடத் தவறிவிட்டனர்.

2. இந்தியா மீதான பேரார்வத்தில் வெறும் இலட்சியக் கனவில் தமிழ்த் தலைமைகள் மிதந்தனர்

மொத்தத்தில் சிங்கள இராஜதந்திரம் வெற்றி பெற தமிழர் தரப்பில் காணப்பட்ட நிகழ் கால அரசியல் போக்கினை சரிவரப் புரிந்து கொள்ளாமையும், தூரநேக்கற்ற செயற்பாடுகளும் தமிழினம் துயர்களை சுமக்க காரணமாகின.

சிங்களத் தலைவர்கள் பிரித்தானியர் உருவாக்கிக் கொடுத்த பெரும்பான்மை இன ஜனநாயகத்தை சுதந்திரத்தின் பின் மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும், தமிழர் விரோதப் போக்கினையும், இந்திய விரோதப் போக்கினையும் நிறுவனப்படுத்தும் அரசியல் யாப்புக்களை உருவாக்கப்பயன்படுத்திக் கொண்டனர்.

இவ்வாறு நிறுவனமயப்படுத்தப்பட்டு பௌத்தத்திற்காகவும் சிங்கள இனத்துக்ககாகவுமென நடைமுறையில் உள்ள யாப்பினை புதிய அரசியலமைப்பு U TURN எடுக்க வழி வகுக்குமா? அதாவது கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி முறைக்கேற்ப புதிய அரசியலமைப்பு வளைந்து கொடுக்குமா? ஏன்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

நல்லிணக்கம் பற்றியும், புதிய அரசியலமைப்புக் கூடாக தீர்வு என்றும் கூறும் நல்லாட்சி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி ஐ. நா. வில் உரையாற்றும் போது பல்லின. பல கலாசாரம் குறித்த இலங்கை பற்றியல்ல பௌத்த நாடு என்றே விழித்துப் பேசுகின்றார்.
மாற்றத்தைக் காண விரும்பும் ஜனாதிபதியே தம்பதீபக் கோட்பாட்டில் இருந்து விலக முடியாதிருக்கும் நிலையில் நல்லாட்சியால் மாற்றத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மையாகும்.

இவ் வேளையில் தென்னிலங்கையின் மன நிலை பற்றிய சிறிய இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
முள்ளிவாய்க்கால் நோக்கிய போரில் கிளிநொச்சியின் வீழ்ச்சியையடுத்து அடுத்து என்ன ? என்பது குறித்த தேடுதலில் கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஈடுபட்டனர். அதாவது இலங்கை அரசியலில் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென்ற நியாயமான எதிர்பார்ப்பில் அடுத்து என்ன? என்ற தேடுதல் தொடங்கியது என்பது உண்மைதான்.

இதற்கும் அப்பால் தமது புவிசார் அரசியல் நலன்கள் குறித்த எதிர்பார்ப்பிற்காகவும் அடுத்து என்ன? என்ற தேடுதலில் கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் கொள்கை வகுப்பாளர்களின் அடுத்து என்ன? என்ற தேடுதலின் மறு பக்கம் அமைந்திருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.

அடுத்து என்ன? என்பது குறித்த தேடுதலுக்கான பதிலைக் காணுமுகமாக கொழும்பில் ஒரு பிரபல ஹோட்டலில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. அந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து அந்தக் கலந்துரையாடலில் அதிக கரிசனை காட்டப்பட்டது. அதாவது அரசியல் தீர்வுக்காண வழிகள் திறக்கப்படுமா? அதற்கான ஏது நிலைகள் உள்ளனவா? என்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் இரு ஊடகவியலாளர்களே கலந்து கொண்டனர். ஒருவர் நான். மற்றொருவர் ஒரு சிங்கள ஊடகவியலாளர்.

கலந்துரையாடலை ஆரம்பத்தில் இருந்து செவிமடுத்துக் கொண்டிருந்த அவர் கூறிய வார்த்தைகள் இது தான்.

‘தமிழர்களுக்கென்று விசேடமான பிரச்சினைகள் என்று ஒன்றும் இல்லை. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான பிரச்சினைகளே உள்ளன. போர் முடிந்தவுடன் இருவருக்கும் உள்ள பெதுவான பிரச்சினைகள் பற்றி பேசி அதற்கான தீர்வு குறித்து இணைந்து பணியாற்றலாம் என்று அடுத்து என்ன? என்பதற்கான பதிலை வழங்கினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இன விவகாரத் தீர்வு குறித்து பெரிதாகப் பேசப்பட்டமையை அனைவரும் அறிவர். இவ்வாறு பேசப்பட்ட தீர்வு குறித்த கருத்தோட்டம் போர் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக மாறவே ஆட்சியாளர்களினதும் குறிப்பாக தென்னிலங்கையினதும் மனமாற்றத்தின் பிரதிநிதியாகவே அந்த சிங்கள ஊடகவியலாளர் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் உள்நாட்டு புத்திஜீவிகள் அடங்கிய அந்த கலந்துரையாடலில் பிரகடனப்படுத்தினார்.

இதன் உண்மைத்தன்மையை போருக்குப் பிந்திய இலங்கைச் சூழல் தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தலைமைத்துவங்களுக்கும் நன்றாக உணர்த்தியதை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.

இதன் அனர்த்தம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தின் போருக்குப் பிந்தைய ஆட்சி ஆழமான அனுபவத்தை தமிழ் மக்களுக்குத் தந்ததை மறப்பதற்கில்லை.

இவ்வேளையில் நல்லாட்சி குறித்த கருத்தோட்டத்திற்குள் தென்னிலங்கை அரசியல் புகுந்தது. ஆட்சி மாற்றம் பற்றி தென்னிலங்கை அதிகம் பேசியது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா களம் இறக்கப்பட்டார். அவ்வேளையில் ஊடகத்துறையுடனான சந்திப்பொன்று கொழும்பில் பிரபல ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஒரு தமிழ் ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும். சரத் பொன்சேகா வெற்றி பெறச் செய்யப்பட வேண்டுமென மிக ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தார். இதனைக் கவனித்த ஒரு சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் இவர் ஏன் இவ்வாறு ஆக்ரோசமாகப் பேசிக்கொண்டிருக்கின்றார்? என்று என்னிடம் வினவினார். நான் தமிழ் ஊடகவியலாளரின் கூற்றை மொழி பெயர்த்துக் கூறினேன்.

ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோன அவர் எங்களுக்கு நல்லாட்சி வேண்டும். அதற்காகவே சரத்பொன்சேகாவை ஆதரிக்கின்றோம். உங்களுக்கு மகிந்த ராஜபக்ஷவும், சரத்பொன்சேகாவும் ஒன்று தானே. இருவருமே உங்களுக்கெதிராக போர் செய்தவர்கள் அல்லவா? எங்களுக்கு நல்லாட்சி வேண்டும் என்பதற்காக மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப விரும்புகின்றோம். இதன் மூலம் தமிழர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது. இவர் எதை எதிர்பார்த்து சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமெனக் கோருகின்றார்? என்று அந்த சிங்கள ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதாவது போர் நடைபெற்றபோது சகோதரர்களாக உருவகப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் போரில் வெற்றி கிடைத்தவுடன் தூக்கி வீசப்படுவதையும், நல்லாட்சி அமைவதற்கு முன்பே அது தமிழர்களுக்கல்ல. சிங்களவர்களுக்கே என்று கூறப்பட்டதானது இரு சிங்கள ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட கருத்தாக அன்றி ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் கருத்தியலாக, நிலைப்பாடாக இருக்கின்றது என்பதைப் பதிவு செய்வதற்காகவே இந்த இரு சம்பவங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
சிங்கள இராஜதந்திரம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்திற்குள் சிக்குண்டு சர்வசே அரசியலில் மீள முடியாத நிலையில் காணப்பட்ட இலங்கை அரசை இன்றைய சிங்களத்தலைவர்கள் நல்லாட்சி என்ற போர்வையில் மீட்டெடுத்திருக்கும் விதமும் அதற்காக யுதத்தால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ்த் தரப்பையே பயன்படுத்தி நல்லாட்சி என்ற கோஷத்துடன் வெற்றி பெற்ற சமார்த்தியமும், போர்க்குற்ற விசாரணையில் இருந்து குற்றம் புரிந்தவர்களையும் கூடவே பாதுகாத்திருக்கும் விதமும் இலங்கையில் மாத்திரமல்ல உலகளாவிய இராஜதந்திர வரலாற்றில் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மு . திருநாவுக்கரசு குறிப்பிடுகின்றார்

அதாவது சர்வதேச தலைவர்களினதும் தமிழ்த் தரப்பினரதும் கண்ணுக்குள் மண்ணைத் தூவி தாம் தப்பித்துக் கொண்ட விதத்தில் சிங்கள இராஜதந்திரம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது.

இத்தகைய வெற்றியைத் தொடர்ந்து இன அழிப்பை இலகுவாக நிறைவேற்ற ஏதுவான இன கபளீகரக் கொள்கையை மிகத் திறம்பட திட்டமிட்டு அதை சர்வதேச சமூகத்தினதும் தமிழ்த்தரப்பினரதும் அனுசரணையுடன் நிறைவேற்றும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் திறமையுடன் செயற்பட்டு வருகின்றது.

அதாவது இராணுவ வழியிலான இன அழிப்புக்கு மாற்றீடாக தோலிருக்க சுளை பிடுங்கும் அதி நுணுக்கமான இனக் கபளீகர முறையிலான இன அழிப்பை இன்று கையில் எடுத்துள்ளது என்றும் நல்லாட்சி குறித்து அவர் குறிப்பிடுகின்றார்.

2030 ஆம் ஆண்டுக்குள் வடக்கு கிழக்கின் தாயக் கோட்பாட்டை முற்றாக இல்லாமல் ஆக்கும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள மாகாண எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட உள்ளன.

திருகோணமலையைச் சுற்றி சுமார் பத்து லட்சம் மக்கள் குடியேற்றப்படவுள்ளனர். இவ்வாறு துரித கதியில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்தத் திட்டங்களுக்கு முரணான வகையில் புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கும் தீர்வினைக் கொண்டு வரும் நிலையில் அமையுமா என்ற கேள்வி எழும்புகின்றது.

காலத்தை இழுத்தடித்தல்.

இலங்கை வரலாற்றில் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தை ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் செய்து வந்துள்ளன.

தமிழர் தரப்பு விடயங்களில் இழுத்தடிப்பை மேற்கொள்ளும் அரசாங்கங்கள் தமது இலக்கை நோக்கி மிக வேகமாக காய்களை நகர்த்துவதில் பின் நிற்பதில்லை.

அதாவது காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயம் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் அல்லது சிங்கள மக்கள் நலன் நோக்கிய விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது இருக்குமானால் ஆபத்தில்லை.

ஆனால் தமிழர் விவகாரத்தில் இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளும் அதே வேளையில் தமிழர்களுக்கு விரோதமான போக்கினை விரைவுபடுத்துவதானது தமிழ் மக்களுக்குப் பாரிய பாதிப்பினை உருவாக்குவதாக அமைந்து விடுகின்றன.

தமிழ் மக்களுக்கெதிரான வரலாறு மீண்டும் பின் நோக்கி 1963 ஆம் ஆண்டினை நோக்கி திசை திரும்பியுள்ளது.

அமைதியாக இருந்த வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மீது சிங்களம் மாத்திரம் கொள்கையை மிக காத்திரமாக நடைமுறைப்படுத்தும் கட்டளையுடன் நெவில்லே ஜயவீர அவர்களை சிறிமா அம்மையாரால் 1963ஆம் ஆண்டு அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார் .

சிங்களம் மாத்திரம் கொள்கைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு அடுத்த 25 வருடங்களில் துப்பாக்கி ஏந்திய கலகமாக மாற்றமடையும்.

அதனை எதிர்கொள்வதற்கு தற்போதே அதாவது 1963லேயே ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நெவில்லே ஜயவீரவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அது மாத்திரமல்ல தமிழ் தொழில்சார் நிபுணர்களான சட்டத்தரணிகள், வைத்தியர்கள் போன்றோர் தமிழர் விவகாரத்தில் கொண்டுள்ள கட்டுப்பாட்டை இழப்பர்.

அந்த இடத்தை தீவிரவாத இளைஞர்கள் கையேற்பர். எனவே தற்போதே சங்கிலித் தொடர் போன்று வட மாகாணத்தில் படை முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டது.

படை முகாம்கள் நிறுவப்படுவதை நியாயப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வரும் கள்ளக் குடியேற்றவாசிகள் மற்றும் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி மேற்கொள்ளப்படும் கடத்தல் போன்ற இரு தேசிய பிரச்சினைகளை முறியடிப்பதற்கே படை முகாம்கள் என்ற வாதத்தை முன் நிறுத்துதல் என்பதாகும்.

அதே பாணியில் அதாவது 1963இல் கிளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக படை முகாம்களை அமைத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு தீவிரவாதம் மேல் எழக் கூடாது என்பதை இலக்காகக் கொண்டு வடக்கில் மீண்டும் படை முகாம்களை ஸ்திரப்படுத்துவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது.

1963 இல் கள்ளக் குடியேற்றம், கடத்தல் போன்றவற்றைக் காரணம் காட்டிய இலங்கை அரசு இன்று போதைவஸ்து கடத்தல், வட பகுதியில் கலாசார சீர்கேடு போன்ற பல்வேறு விடயங்களை முன் வைத்து படை முகாம்களைப் பலப்படுத்தி வருகின்றது.

இரு விடயங்களுமே அமைதியாக இருந்த மக்கள் மீது திணிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே உள்ளது.

தம்பதீபக் கோட்பாட்டை நிலை நிறுத்தும் உறுதியுடன் தோன்றிய சிங்களத் தலைமைகளின் நீட்சியே இன்று ஆட்சியில் இருப்பவர்கள். இவர்களால் தீர்வுக்கான யாப்பு மாற்றத்தை கொண்டு வர முடியுமா?

அதற்கும் அப்பால் தம்பதீபக் கோட்பாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு நல்லாட்சி கூறுகின்ற யாப்புக் கூடான தீர்வினை அனுமதிக்குமா?

சில வேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் காலத்தில் எழுந்த சர்வதேச எதிர்ப்பு அலை தொடர்ந்திருக்குமாக இருந்திருந்தால் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமாகியிருக்கலாம்.

ஆனால் அவ்வாறானா சர்வதேச அரசியல் நிலைமை இன்றில்லை. இன்றைய சர்வதேச அரசியல் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலுடன் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் தான் சர்வதேச அரசியல் உள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கைதேர்ந்த, தொழில் சார் நிபுணத்துவத்துடன் கூடிய இராஜதந்திர வெற்றிகளுடன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் நீட்சியாகவே நல்லாட்சி அரசாங்கம் உள்ளது.

1. இந்த அரசாங்கத்திற்கு சாதகமான சர்வதேச அரசியல் நிலைமை உள்ளது.

2. இதற்கும் அப்பால் நல்லாட்சிக்குள் ஒன்றிணைந்த சிங்களத் தலைமைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள எதிரணியினர் தமிழர் விரோதப் போக்கினையே முதலீடாகக் கொண்டு செயற்படும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கூடான தீர்வு சாத்தியமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

3. இராஜதந்திர சாமார்த்தியமோ அல்லது வலுவான சர்வதேச ஆதரவோ இல்லாத நிலையில் தமிழர் தரப்பால் மிகவும் பலமானதும் வலுவானதுமான சிங்கள தரப்பை வெற்றி கொள்வதென்பதோ அல்லது வழிக்குக் கொண்டுவருவதென்பதோ எத்துணை சாத்தியமானதாக அமையும் என்பது குறித்து தமிழர் தரப்பு சிந்தித்தாக வேண்டும்.

4. இதனையும் மீறி தமிழர் தரப்பு நல்லாட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கை, அரசியல் அமைப்புக்கூடான தீர்வினை கொண்டு வருமாக இருப்பின் இன்றைய தமிழர்களின் தலைமைத்துவங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை இராஜதந்திர வெற்றியாக அமையும். அது மாத்திரமல்ல, இன்றைய தமிழ் தலைமைகள் தமிழர் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவர்களாகும்.

5. நல்லாட்சி என்ற சொற்பதமோ அல்லது நல்லாட்சியினர் வழங்கியுள்ள வாக்குறுதிகளோ அல்லது நல்லாட்சியினர் மீது தமிழர் தரப்பு கொண்டுள்ள அதீத நம்பிக்கை போன்றவை மாத்திரம் புதிய அரசியலமைப்புக்கூடான தீர்வு பயணத்தை இலகுவாக்கிவிடும். அல்லது தீர்வு விவகாரம் சுகப் பிரசவமாகிவிடும் என்பதற்கு போதிய உத்தரவாதமாக மேற்கூறியவை அமைந்துவிடாது என்ற உண்மையை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
அதன் எதிரொலிதான் எழுக நிகழ்வு.

அதாவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான போராட்டத்தில் ஆயுதமேந்திய போராட்டம் மௌனமாக்கப்பட்டுவிட்டது என்பதற்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் மௌனமாகிப்போய்விட்டதாக அர்த்தமாகாது.

ஆயுதப் போராட்டம் மௌனமாக்கப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையிலும் அரசியல் தீர்வோ, தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளோ தீர்வின்றி தொடர்கின்றன.

ஏழு வருடகாலமாக அமைதி காத்த தமிழ் மக்கள் இன்று அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய அரசியல் கள நிலவரம் மு. திருநாவுக்கரசு தமது நூலில் குறிப்பிட்டிருப்பது போல் தமிழ் மக்கள் தமது அகிம்சை போராட்டத்தில் பல களங்களை காணவேண்டிவரும் என்று எதிர்வு கூறியுள்ளார். காந்திஜீக்கள், நெல்சன் மண்டேலா. மாட்டின்லூதர் என பலர் தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்தில் இந்த மண்ணில் அவதாரம் எடுப்பார்.

இலங்கை அரசியலில் முகமூடிகள் மாறி இருக்கின்றன. 1963 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்று இலங்கையின் ஆட்சி பீடத்தில் பலர் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.

இன்று தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால் அரச நிர்வாக பொறி முறையும், கொள்கை வகுப்பாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரலும் மாற்றத்துக்குற்படாது அப்படியே உள்ளன.

ஆட்சியில் இருப்போர் வெளிப்படையாக எதைப் பேசினாலும் நடைமுறையில் இந்தக் கட்டமைப்பு எந்த விதமான நெகிழ்வுத் தன்மையையோ அல்லது மாற்றத்தையோ அல்லது புதிய அணுகு முறையையோ வெளிக்காட்ட முன் வரவில்லை.

அந்த வகையில் நல்லாட்சியின் பிரதிநிதிகள் தமது காலத்தில் தேசிய இன விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பதா அல்லது சிங்களப் பெருந் தேசியவாதத்துடன் முரண்படாமல் போவதா என்பது தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் முன் உள்ள பெரிய சவாலாகும்.

இது போன்ற ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே சந்திரிகா அம்மையார் தான் கொண்டு வந்த இன விவகாரத் தீர்வையே கைவிட நேர்ந்தது என்பதை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பலவீனம் அடைந்து போவதா அல்லது ஓரளவுக்குக் கீழ் பலவீனமாகிப் போய்விடக் கூடாது என்பதா? இதுவே இன்றுள்ள கேள்வியாகும்.

ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கெதிரான சக்தி இருக்கின்றது என்பதை உலகத்துக்குக் காட்ட மகிந்த ராஜபக்ச அணி தேவைப்படுவதாகவே இன்றைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.

அமைதியாக இருந்த தமிழ்ச் சமூகத்தின் மீது சிங்கள மொழியைத் திணிக்கின்றனர். அதற்கு சாத்வீக வழியில் எதிர்ப்புக் காட்டப்பட்ட போது இராணுவ முகாம்களை அமைக்கின்றனர்.

இராணுவ முகாம்கள் அமைப்பதை நியாயப்படுத்துவதற்கு கள்ளக் குடியேறறம், கடத்தல், குற்றச் செயல்கள் போன்றவைகள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

1963 இல் நடைபெற்றது 2009க்குப் பிறகு அமைதி திரும்பியதாகக் கூறப்படும் வடக்கில் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது.

அதாவது இராணுவத்தின் பிரசன்னத்தையும், இராணுவ முகாம்களின் இருப்பையும் நியாயப்படுத்தும் வகையில் தற்போது,

1.வடக்கில் போதைப் பொருள் பாவனை

2.போதைப் பொருள் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுவது.

3.குடா நாட்டில் இடம் பெறும் குற்றச்செயல்கள், காடைத்தனங்கள், வாள் வெட்டுக் கலாசாரம் போன்றவைகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

4.அத்துடன் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளி இராணுவப் பிரசன்னத்தை மக்கள் கோரும்படி தூண்டப்படுகின்றது.

இதில் விசித்திரம் என்னவெனில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொலிஸ், இராணுவம் நிலை கொண்டுள்ள வடக்கில் மேற் கூறிய கடத்தல், போதைவஸ்து பாவனை, பாலியல் வல்லுறவு, காடைத்தனம், வாள்வெட்டுக் கலாசாரம் போன்றன பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டை மீறி எப்படி நடைபெறுகின்றது என்பது தான்.

அந்த வகையில் இதற்குப் பின்னால் உள்ள அரசியல், இராணுவ நலன்களை உணர்ந்து கொள்வதற்கு தமிழ் மக்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்பதை நீங்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒத்துக்கொள்ளும்.

அப்படியாயின் தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்.

தமிழர் விவகாரம் சர்வதேச உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக உள்ளது. தமிழர் விவகாரம் குறித்து சர்வதேச உறவுகளில ஏற்படும் மாற்றங்களே தமிழர் விவகாரத்துக்கான தீர்வினையும், இலங்கை மீதான அழுத்தத்தையும் உருவாக்கும் என்பதை தமிழர் தரப்பு உணர வேண்டும்.

அந்த வகையில் தமிழர் தரப்பினரின் ராஜதந்திர நகர்வுகள் இலங்கை அரசாங்கங்களையும் சர்வதேச சமூகத்தையும் வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் 1963 அரசியல் நிலைக்குத் திரும்பிவிட்டனர்.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி நிர்வாக அலகுடன் தமது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்குத் தயாராக இருக்கின்றனர்.

அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயாவும் இதனையே வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஆனால் இலங்கை அரசின் கட்டமைப்பு தமிழ் மக்கள் மீது இன்னொரு அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நகர்வுகள் இலங்கையில் நிலையான, நீடித்த சமாதானத்தைத் தோற்றுவிக்கவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கவும் உதவப் போவதில்லை.

நீடித்த, நிலையான சமாதானமும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், நல்லுறவும் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயாவின் கூற்று பொய்த்துப் போகக் கூடாது.

நல்லாட்சியின் பிதாமகன்களான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர் விவகாரம் குறித்து முன் வைக்கும் வார்த்தைகள் உறுதி மொழிகள் என்பன தகர்ந்து போகும் வார்த்தைகளாகவோ, தகர்க்கப்படும் உறுதி மொழிகளாகவோகப் போய்விடக் கூடாது.

தற்காலிக இடைக்கால நிர்வாக சபை அரசு அரசியல்.

தீர்வினை முன் வைத்து நடை முறைப்படுத்த வேண்டும். அரசியல் தீர்வு தாமதமாகும் பட்சத்தில் மாற்றீடாக தற்காலிக இடைக்கால நிர்வாக ஒழுங்குமுறையை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்.

விரைந்த அரசியல் தீர்வு, தாமதமாகும் பட்சத்தில் தற்காலிக இடைக்கால நிர்வாக சபை என்பது தமிழ் மக்கள் நெருக்குதல்கள், பாதிப்புக்களில் இருந்து சற்று மூச்சு விட இடம் அளிப்பதாக அமையும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தவுடன் சர்வதேச சமூகம் இன விவகாரத்துக்கான அரசியல் தீர்வு காணும் வரை இடைக்கால நிர்வாகத்தை முன்மொழிந்து செயற்படுத்தியிருந்தால் நிச்சயமாக அரசும், சிங்கள தேசியவாதிகளும் விரைந்து ஒரு அரசியல் தீர்வுக்கு முன் வந்திருப்பர்.

தற்போதும் கூட சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிணை எடுப்பதற்கு அரசியல் தீர்வு காணப்படுவதான உறுதி மொழியே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் தீர்வு குறித்து ஆக்கப்பூர்வமான நகர்வுகள் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபை ஒழுங்குக்கு முன் வருமாறு சர்வதேச சமூகம் இலங்கையின் இன்றைய நல்லாட்சியினரிடம் முன்மொழிந்து செயற்படுத்த முன் வர வேண்டும்.

சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தியேனும் இந்த முடிவுக்கு வருமாக இருந்தால் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் தீர்வினை விரைந்து முன்வைக்கும்.

தமிழ்ச் சமூகம், தமிழ்க் கட்சிகள், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம் பெயர் அமைப்புக்களும் ஒரு தற்காலிக இடைக்கால நிர்வாக சபை குறித்த ஒழுங்கமைப்புக்கு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் வற்புறுத்த வேண்டும்.

Related Posts