பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. முக்கிய தலைவர்கள் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண முதலமைச்சர் என இரண்டு தலைவர்கள. கலந்து கொண்ட கூட்டத்தில் இரு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்வதென்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது.
ஒரு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதென்ற ஒரு சாதாரண விடயத்தில் கூட ஒருமித்த முடிவு எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முடியவில்லை என்ற போது இவர்கள் எவ்வாறு ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுத்தருவார்கள்.
அரசாங்கம்தான் தமிழ் மக்கள் விடயத்தில் காலம் தாழ்த்துகின்றது என்று பார்த்தால் அரசாங்கம் தரும் நிதியைப் பெற்று வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கும் காலதாமதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தான் கடந்த வருடம் வடமாகாண சபைக்கு செலவு செய்ய அரசாங்கம் கொடுத்த நிதியையைக் கூட காலதாமதப் படுத்தி திருப்பி அனுப்பி சாதனை படைத்தார்கள். இவ்வாறு காலம் தாழ்த்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு பின்பு மற்றவர்கள் மீது பழியைப் போட்டு மிக இலகுவாக மக்களை ஏமாற்றி அறிக்கையும் விடுவார்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு கருத்துக் கணிப்பு என்று கூறி காலதாமதப் படுத்தாமல் எமது மக்களுக்கு உடனடியாக கிடைக்க வழி வகை செய்ய வேணடும்.
கட்சியின் உயர் மட்டத்தலைவர்கள் ஒன்று கூடியும் ஒரு முடிவு எடுக்கமுடியாமல் வெளியில் வந்து தனிப்பட்ட முறையில் தத்தமது கருத்துக்களைக் கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றார்கள். அது அவர்களின் கூட்டுப் பொறுப்பட்ட தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் மக்களின் தலைவிதியை தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் கையில் சிக்கத் தவிக்கும் எமது மக்களின் சாபக் கேட்டை என்னவென்று சொல்வது.
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி