ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது!

EPDP-bannarவடமாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு நல்லூர் கோவில் வீதியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதன்மை வேட்பாளரான தவராசா அவர்களினால் பணிமனையாக பாவிக்கப்படும் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா வீட்டு வாசலில் இப் பதாதை அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த விசமிகள் பதாதைகளை எரித்த போது அயலிலுள்ள பொதுமக்களே எரிந்து கொண்டிருந்த பதாதை தீயை அணைத்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

பதாதைகளை எரித்து சிதைக்கும் வன்முறைகள் மூலம் எம்மை மக்களின் மனங்களிலிருந்து அகற்றி விடமுடியாது என்றும், வன்முறைகளை கைவிட்டு எம்மை போல் நேரிய வழிமுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நாகரீக அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென்றும் கூறினார்.

இதேவேளை, நேற்றைய தினம் யாழ்.கச்சேரியில் நடந்த கூட்டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முதன்மை வேட்பாளரான சீ.வி விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்திருந்த சி.தவராசா அவர்கள் ஏற்கனவே ஈ.பி.டி.பியின் பதாதைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எரித்தது மற்றும் சேதப்படுத்தியது போன்ற வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றது குறித்து எடுத்து விளக்கியதாகவும்,இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிறுத்திக் கொள்வது ஆரோக்கியமானது என சீ.வி விக்னேஸ்வரன் அவர்களிடம் சி.தவராசா அவர்கள் தெரியப்படுத்தியதாகவும் அன்றிரவே மீண்டுமொரு பதாகை எரிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஈபிடிபியின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.