ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது சமர்ப்பிப்பதற்காக யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு விபரங்கள் தொடர்பில் அரசாங்கம் பொய்யான தகவல்களைத் திரட்டி வருகின்றது’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கமானது தனது உள்நாட்டுப் பிரச்சினைகளை கையாளத் தகுதியற்ற நாடாக சர்வதேசத்தின் முன்னிலையில் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது என்றும் சுரேஷ் எம்.பி கூறினார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘2012ஆம் ஆண்டும் 2013ஆம் ஆண்டும் ஜெனீவா கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.
அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கியமாக காணாமற் போனோர் தொடர்பாகவோ அல்லது அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவோ அல்லது இராணுவத்தை வெளியேற்றி மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாகவோ அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவோ இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் இவற்றில் முன்னேற்றம் எதனையும் காட்டவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும்’ என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ‘எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மிக வலுவான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளதாகவும்’ அவர் சுட்டிக் காட்டினார்.
‘இதற்கு மேலாகச் சென்று இலங்கை அரசாங்கம், தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. உலக நாடுகள் இந்தப் புரிந்துணர்வைக் குழப்பப் பார்க்கின்றன. உலக நாடுகள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் விரிசல்களை ஏற்படுத்தும் என்ற கருத்துக்களைச் சொல்லுகின்ற பாணியையும் நாங்கள் பார்க்கின்றோம்.
ஆனால் மக்களின் மீள்குடியேற்றம் என்பது வலிகாமம் வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, மன்னார், திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் இன்னமும் மீள்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்பது மாத்திரமல்ல மீள்குடியேற்றம் நடைபெறமாட்டாது என்ற நிலைப்பாட்டையே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது’ என்றார்.
‘இரண்டு வாரங்களுக்கு முன்பாக கொடிகாமம் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் இராணுவத் தலைமையகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய கருத்து என்னவென்றால் யுத்தம் முடிந்து மேலும் மேலும் புதிய புதிய இராணுவ முகாம்கள், முக்கிய இராணுவ நிலைகள் தனிப்பட்ட மக்களினுடைய காணிகளில் அமைக்கப்படுகின்ற நிலைமை காணப்பட்டு வருகின்றது என்பதாகும்.
இதற்காக மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளை காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலான எவ்வாறான விசாரணைகள் இடம்பெறப் போகின்றன என்பது தொடர்பிலான விடயங்கள் கூட தெளிவாக்கப்படவில்லை’ என்றார்.
‘2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் பேச்சுவார்த்தை என்பதற்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது. இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மேலும் மேலும் விரிசல்களை ஏற்படுத்துகின்றனவே தவிர இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு என்று அரசாங்கம் தெரிவிப்பது பொய்யான பிரச்சாரம் என்பதே உண்மையாகும்.
அத்துடன், தமிழ் மக்களை பொறுத்தவரையில் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடர் பலப்படுத்த வேண்டும். அங்கு நடைபெறபோகும் விசாரணை நீதியானதும், நியாயமானதுமாக நடைபெற்று இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வு அவசியம் என்பதையே வலியுறுத்துகின்றனர்’ என்றும் அவர் கூறினார்.
‘தமிழ் தேசிய கூட்டமைப்பு பிழையான தரவுகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகின்றதாக அண்மையில் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் விபரங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரிற்காக பொய்யான தரவுகளை வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்காக அவசர அவசரமாக பொய்யான தரவுகளை சேகரிக்கின்றார்கள். பிழையான விண்ணப்படிவங்களை அச்சிட்டு, விண்ணப்படிவங்களை பூரணப்படுத்தி பொய்யான தரவுகளை சேகரிக்கின்றார்கள்.
சேகரிக்கும் தரவுகளில் சரியான தகவல்கள் இல்லை. அந்த தரவுகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிழையான தரவுகளை கொடுப்பது அரசாங்கமே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.