Ad Widget

ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

“ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“போருக்குப் பின்னர் இலங்கை முன்நோக்கிச் செல்லவண்டும். அங்கு நல்லிணக்கம் ஏற்படவேண்டும். அரசு பொறுப்புக் கூறவேண்டும் ஆகிய முக்கிய விடயங்களை சர்வதேச சமூகத்தினர் எதிர்பார்த்தனர்.

இவற்றை முன்னெடுப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. உள்ளகப் பொறிமுறையையே அனைத்துலக சமூகம் வலியுறுத்திவந்தது. எனினும், முன்னாள் அரசு முட்டாள்தனமாக நடந்துகொண்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காரசாரமாக விமர்சித்து அவற்றை நிராகரித்தது.

எதேச்சதிகாரமாக நடந்துகொண்டது. ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் முன்னாள் அரசு தான்தோன்றித்தனமாகத்தான் செயற்பட்டது. எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. உறுப்புநாடுகளும் ஆதரவு நல்கியுள்ளன. இது முக்கிய திருப்பமாகும்.

இதனால், புதிய அரசு சர்வதேசத்தின் மத்தியில் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக விளங்குகிறது. ஆனால், இந்தத் தீர்மானம் தொடர்பில் சிலர் தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர். மக்கள் மத்தியில் அதை பிழையான விடயமாக எடுத்துக் காட்ட முற்படுகின்றனர்.

தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையை இனவாத கோணத்தில் அரசியலுக்காக பயன்படுத்தவேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை, விசாரணைக் கட்டமைப்பில் சர்வதேச நீதிபதிகள் மாத்திரம் இடம்பெற்றால், அது பக்கச்சார்பான விசாரணை எனக் கூறப்படும். அதேபோல் உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரம் விசாரணை நடத்தினால் அதுவும் ஒருதரப்பு வாதமாகவே கருதப்படும். எனவே, இருதரப்பு பங்களிப்பு அவசியம்.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை அரசு அமுல்படுத்தவேண்டும். இதற்காக வினைத்திறன்மிக்க நடவடிக்கைகள் அவசியம். நான் புலிகளை நியாயப்படுத்துவதற்கு முற்படவில்லை. அவர்கள் மீதும் ஜெனிவாத் தீர்மானத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களும் நியாயபூர்வமாக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோரிக்கையொன்றை விடுத்தார். அதாவது, உள்நாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டில் தீர்த்துக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்று கூறினார். நான் அவருக்கு ஒரு விடயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பண்டாரநாயக்க – செல்வா உடன்படிக்கை டில்லியில் கைச்சாத்திடப்படவில்லை. டட்லி – சேனநாயக்க உடன்படிக்கை நியூயோர்க்கில் கைச்சாத்திடப்படவில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்நாட்டில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவை கைகூடவில்லை. இதற்கு நாட்டை ஆண்டவர்கள்தான் காரணம். பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரினோம். எமக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. எம்மை அடக்கியாள முற்பட்டார்கள். இதற்கு எதிராகவே தமிழர்கள் கொதித்தெழுந்தார்கள். எனவே, உள்நாட்டுப் பிரச்சினையை நாம்தான் சர்வதேச மயப்படுத்தியுள்ளோம் எனக் கூறப்படும் கூற்றை எம்மால் ஏற்கமுடியாது” – என்றார்.

Related Posts