ஐபிஎல் வீரர்கள் ஏலம் பட்டியலில் யாழ்ப்பாணம் வீரர் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்!!

14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் வரும் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுவரை ஆயிரத்து 97 வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர்.

அணி நிர்வாகங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க தயாராகி வரும் நிலையில், ஏலம் எடுப்பதில் அனைத்து அணிகளுக்கும் புதிய 5 நிபந்தனைகளை விதித்துள்ளது ஐ.பி.எல் கவுன்சில்.

அணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதனிடையே அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களை ஜனவரி 20ம் திகதி முடிவு செய்துவிட்டது. எனினும் வீரர்களை விடுவிக்க இன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.