ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் தொடர்பு இல்லை – சுரேஷ்

SURESHஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர்.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்டதொன்றெனவும் ஈ.பி.ஆர்.எல். எவ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ்பிரேமசந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஆயினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஐங்கரநேசன் மறுத்துள்ளார்.

வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையின் அமைச்சுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் விவசாய, கால் நடைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சராக யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் போட்டியிட்ட பொ.ஐங்கரநேசன் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில், வட மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ. ஐங்கரநேசன், தனிப்பட்ட முறையில் வட மாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளார். அத்துடன் தனக்கும் ஈ.பி.ஆர்.எல். எவ்க்கும் இடையில் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவரே கூறியுள்ளார்.

எமது கட்சி சார்பாக அமைச்சுப் பதவியை வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தேன். ஆனால் என்னுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல், அமைச்சுப் பதவி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈ.பி. ஆர். எல். எவ்க்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன். என்று சுரேஷ் பிரேமசந்திரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொ. ஐங்கரநேசனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, கட்சிக் கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையேன்று வாய் மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ நான் சுரேஷ் பிரேமசந்திரனுக்குத் தெரிவிக்க வில்லை. அத்துடன் முதலமைச் சரினால் சகல உறுப்பினரகளதும் சுயவிவரக் கோவை கோரப்பட்டிருந்தது. நானும் சமர்ப்பித் திருந்தேன். அதற்கு அமைவாக இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன் என்றார்.