தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கை அரசு எம் மீது திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தென்னிலங்கை பேரினவாதிகள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாகப் படிக்கவில்லையேன்று நினைக்கின்றேன். நாம் ஒன்றுபட்ட இலங்கைக் குள்ளேயே தீர்வை முன்வைத்துள்ளோம். அவர்களுக்கு உறுதி கொண்டிருப்பது எல்லாம் சுயநிர்ணய உரிமைதான்.எமது தேர்தல் விஞ்ஞாபனம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டது
சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந் தங்களின் அடிப்படையிலேயே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுறுத்தியுள்ளோம்.
ஒரு நாட்டின் அரசியல் சாசன அடிப்படையிலான மக்கள் குழாம் சிவில், அரசியல், பொருளாதார, கல்வி சார் விடயங்கள் தொடர்பில் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வது உள்ளக சுயநிர்ணயம்.
வெளியக சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றியே பேசுகிறது. நாங்கள் பெரும்பான்மை இனத்துக்கு அடிமைகளாக வாழ முடியாது. எங்களுக்கு போதியளவு அதிகாரம், சுயாட்சியும் வழங்கப்பட வேண்டும்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அறிக்கை, பல்லின நிபுணர் குழு அறிக்கை, மஹிந்த பான் கீ மூன் கூட்டறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை என்பவற்றில் கூட உச்சக்கட்ட அதிகாரப் பகிர்வு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஜனாதிபதி செயற்படுத்தினரா?
தமிழ் மக்கள் தொடர்பில் என்ன அரசியல் தீர்வு தேவை என்பதை நாம் முன் வைத்திருக்கின்றோம். நாங்கள் முன்வைத்த தீர்வை எப்படி அடையப் போகின்றோம் என்பததையும் குறிப்பிட்டுள்ளோம்.
ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகின்றார் என்பதை முதலில் முன் வைக்கட்டும். சர்வதேசத்தின் பங்களிப்புடனேயே எங்களின் தீர்வு எட்டப்படும் என்றார்.