எழுத்து மூலமான முறைப்பாடுகளுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்: மகிந்த தேசப்பிரிய

mahinda-deshpriyaஎதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் சிலர் இராணுவத்தினரால் அச்சுறுத்துப்பட்டுள்ளதாக கூறப்படுவது
குறித்து பிபிசி செய்தி தளத்திற்கு அவர் அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் தம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தேர்தல்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, அவ்வாறு எழுத்து மூலமான முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் தங்களை அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை என்றும் வடக்கிலே வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்று பொதுவாகத் தெரிவிப்பது போதாது, எழுத்து மூலமாக முறையிட்டால்தான் அதுபற்றிய விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னுடைய அழைப்பின் பேரிலோ அல்லது பொலிசார் அழைத்தால் மட்டுமே இராணுவம் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் என்றும் அவ்வாறில்லாமல், படையினர் தேர்தல் விடயங்களில் தலையீடு செய்திருந்தால், அது தொடர்பில் சரியான முறையில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.