லொறி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் ஏ9 வீதிக்கும் எழுதுமட்டு வாழ் சந்திக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுமட்டுவாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுத்துரை பாலசுப் பிரமணியம் (வயது 27) இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதியூடாக வந்து கொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த லொறியும் பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் பளைப் பொலிஸாரால் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட லொறிச்சாரதி பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.