Ad Widget

எழுக தமிழ்! : தமிழ் மக்கள் பேரவை

 • தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும்
 • தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும்
 • யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்

உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி !

செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !!

வடக்கு – கிழக்கு எங்கும் சிங்களக் குடியேற்றங்கள்!

 • நாவற்குழியில்
 • முருங்கனில்
 • வவுனியாவில்
 • முல்லைத்தீவில்…

என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்.

திரும்பும் இடமெல்லாம் பௌத்த விகாரைகள்

 • 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோணேசர் கோவில் முன்பாக புத்தர் சிலை.
 • 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கேதீச்சரத்தின் முன்னால் பௌத்த விகாரை
 • சைவ மக்களின் புனித தீர்த்தமான கன்னியா வெந்நீரூற்றில் பௌத்த விகாரை,
 • சாம்பல் தீவில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை,
 • கொக்கிளாயில் நீதி மன்றத் தீர்ப்பை மீறி பௌத்த விகாரை.
 • முல்லைத்தீவின் ஏனைய ஓன்பது இடங்களில் பௌத்த விகாரைகள்.
 • ஓமந்தை – சேமமடுவில், கனகராயன் குளத்தில், மாங்குளத்தில், கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அருகில், பரந்தனில், பூநகரியில், மாதகலில்….. என புதிய புதிய பௌத்த விகாரைகள்.
 • இப்பொழுது பழம்பெருமை வாய்ந்த நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அருகில் 67 அடி உயர புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள்.

எங்கள் நிலத்தை முற்று முழுதாக சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் சிறீலங்கா அரசின் முயற்சியை நாம் அனைவரும் இணைந்து முறியடிக்க!

தமிழ் மண்ணை, தமிழ் மொழியை, எமது மதங்களை, கலாசாரத்தை, பண்பாட்டை, எமது பொருளாதாரத்தை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழன் என்ற தனித்துவத்தை காத்திட செப்ரெம்பர் 24இல் யாழ் முற்றவெளியை நோக்கி அணிதிரள்வோம்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று – அதன் தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்று பாதுகாப்புமளிக்கும், சிங்கள பௌத்த அரச ஆயுதப் படைகள் எமது மண்ணிலிருந்து அகற்றப்படல் வேண்டும்.

கடந்த 30 ஆண்டு காலமாக எமது சொந்த வாழ்விடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கில் விரட்டப்பட்ட நாங்கள் நடுத்தெருவில் நிற்க எமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அரச படைகள் உடனடியாக எமது மண்ணிலிருந்து வெளியேற வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும், கடத்தப்பட்ட, சரணடைந்த பின்பு காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், மகளும் எங்கிருக்கின்றார்கள் அல்லது என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி உடன் விடுவிக்கப்படல் வேண்டும்.

யுத்தக் குற்றங்கள், இனஅழிப்புத் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.

இவையெல்லாம் மீண்டும் ஏற்படாவண்ணம் – தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் – இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசத்தின் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித்தீர்வொன்று உருவாக்கப்பட இருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக – மீளப்பெறப்பட முடியாத உறுதிப்பாட்டோடு நிறுவப்பட வேண்டும்.

மேலே முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் — தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றலை வலுப்படுத்தி –

இவையனைத்தையும் நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தினை நிர்ப்பந்திக்கவும்,
இவையனைத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்குத் தெளிவுபடுத்தவும், இவையனைத்தையும் இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தவும்;

இதுதான் தருணம்!

புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்று வரையப்படுகின்றது.

அந்த அரசியலமைப்புச் சட்டம்தான் இன்னும் மூன்றே மாதங்களில் எம்மை ஆளப்போகின்றது.

எமது நீண்ட போராட்டத்தில் பல பத்தாயிரம் போராளிகள் தமது உயிர்களை ஈகம் செய்தும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை தியாகம் செய்துமுள்ளனர். நாங்கள் கொடுத்த விலைகள் அத்தனைக்குமான தீர்வை இந்த அரசியலமைப்பின் ஊடாகத்தான் நாம் பெறவேண்டும்.
இந்த வரலாற்று கடமையை நாங்கள் செய்யத்தவறின் கடந்த 70 ஆண்டு கால அழிவே இனியும் தொடரும்.
எனவே அந்த அரசியல் சாசனம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற பொறுப்பும் கடமையும் தமிழ் மக்களாகிய எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இவ்வாறான ஒரு தருணத்தில் தமிழ் மக்களுக்கு உரித்தான ஒரு சமஸ்டி அரசியல் அமைப்புக்கான தேவையை வலியுறுத்துவதற்கு நாம் ஒன்றுபட வேண்டிய தருணமிது.

 • தமிழ் மக்கள் அனைவரும் – ஆண் பெண் வேறுபாடின்றி அணிதிரள்வோம்!
 • தமிழ் மக்கள் அனைவரும் இளையோர் முதியோர் வேறுபாடின்றி அணிதிரள்வோம்!
 • தமிழ் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி அணிதிரள்வோம்!
 • தமிழ் மக்கள் அனைவரும் ஊர் மற்றும் மத வேறுபாடுகளின்றி யாழ் முற்றவெளிநோக்கி அணிதிரள்வோம்!

தமிழ் மக்கள் பேரவை

Related Posts