எரிபொருள் நிலைய முகாமையாளரின் கைப்பையை அபகரித்த கொள்ளையர்

robberyகல்வியங்காட்டில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றின் முகாமையாளரின் பணப் பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதனால் அதில் இருந்த 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபா பணம் பறிபோனது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு அரியாலை கலைமகள் வீதியில் இடம்பெற்றது.

குறித்த முகாமையாளர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மூடிவிட்டு தனது கைப்பையில் பணம் மற்றும் நிலையத் திறப்புகளை எடுத்துக்கொண்டு சென்றார்.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள் இடைவெளியில் வைத்து அவரைத் தாக்கி வீதியில் விழுத்திவிட்டு அவரது கைப்பையைப் பறித்துக் கொண்டு பறந்தனர்.

அந்தப் பணப்பையில் இரண்டு லட்சத்து 82 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நிலையத் திறப்புக்கள் இருந்ததாக அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கொள்ளை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.