கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய தகவல்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விரைவாக செயற்பட்ட விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
இதனையடுத்து விமானத்தில் பயணித்த 122 பயணிகளும் உயிர் தப்பியுள்ளதுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் கொழும்புக்கு பயணிக்கவிருந்த 244 பயணிகளும் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.