எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும்;சிவாஜிலிங்கம்

தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம்பெற்று வருகின்றதாக கூறி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பும் நோக்கத்தில் அவ்வியக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் என்பவை தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப்படைகளாவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் தமிழ் மக்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம் தமிழ்த் தாயகத்தில் நிலைகொள்ள முடியும். தமிழ் இனப் படுகொலைகளுக்கும், போர்க் குற்றங்களுக்கும் சர்வதேச நீதியை வேண்டி நிற்கும் தமிழ் இனம் – சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே நாடி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தமிழ் இனத்தின் தேசிய விடுதலை இயக்கம் என்பதினை மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்த் தாயகத்தில் நடைமுறை அரசாங்கம் செயல்பாட்டில் இருப்பதை உலகம் அறிந்திருந்த போதிலும், பெரும் தவறுகளைச் செய்த பலஸ்தீன விடுதலை இயக்கம் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக பலஸ்தீனம் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடாக ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே அயர்லாந்தில் ஐரிஸ் குடியரசு – இராணுவம் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் பலநாடுகள் சேர்ந்து அழித்தன. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது எந்த ஒரு நாடாவது பகிரங்கமாக இதனைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

அத்துடன், தற்பொழுது இலங்கையின் வன்னிப் பகுதியில் மாபெரும் மனிதப் படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறி விட்டதாக அதன் உள்ளக அறிக்கையே குற்றம்சாட்டும் அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பியிராமல், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தீர்வைப் பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமே இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்’ என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.